வெள்ளி, டிசம்பர் 23, 2005

மறுபடியும் காவிரி...

செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும்
கஞ்ச வேட்கையில் காந்தமன் வேண்ட
அமர முனிவன் அகத்தியன் தனாது
கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை
செங்குணக் கொழுகிய சம்பாபதி அயல்
பொங்குநீர்ப் பரப்போடு பொருந்தித் தோன்ற

திருச்சி கொள்ளிடத்தில் தண்ணீர் இருந்து நான் பார்த்தேயில்லை. சங்ககால சோழர்கள் காலத்தில், காவிரி கரைபுரண்டு ஓடி நாட்டை அழித்துவிடுகிறது என்று தண்ணீருக்கு மாற்றுபாதையாக அமைக்கப்பெற்றதே கொள்ளிடம். காவிரி நீருக்கு 'கொள்ளும் இட' மாக அமைக்கப்பெற்ற செயற்கை நதி, திருச்சியில் பலகாலமாக வற்றிப்போய் ஒரு சிறிய வாய்க்காலாகவே ஓடிக்கொண்டிருந்தது. கடந்த 50-70 வருட காலத்தில், இப்படி கொள்ளிடம் கரைபுரண்டு ஓடியதைப் யாருமே பார்த்ததில்லையென என் நண்பரின் அன்னை நேற்றுக் கூறினார். திருவரங்கத்தில், இராஜகோபுரத்துக்கு சற்று தெற்கே ஓடும் திருமஞ்சன காவேரி, ரோட்டை தொட்டுக்கொண்டு ஓடுகிறதாம். இப்படி, காவிரி பேச்சு வந்த போது, என்றோ படித்த இந்த பாடல் ஞாபகம் வந்தது.

சூரிய வம்சத்தாரான சோழர் குலத்தில் தோன்றியவன் காந்தமன் என்ற அரசன். சோழ நாட்டில் ஜீவநதி எதுவுமில்லையே என்ற வருந்தினான். சஹ்யாத்ரி மலைமகளான காவிரியை சோழநாட்டுக்கு அழைத்து வருவதற்காக இறைவனிடம் வேண்டி வரம் பெற்றான். அப்படிப்பட்ட காவிரியை, அகத்திய முனிவர் காவிரிக்குமரி மீது பாசம் கொண்டு தன் கமண்டலுவில் அடைத்து வைத்தார். விநாயகர் காக்கை உருவத்தில் அந்த நதியை விடுதலை செய்ய, அவள் விரிந்து, பரந்து சோழ தேசத்தில் ஒய்யார நடைப் போட்டாள். அவள் ஓடிய இடத்திலெல்லாம், காந்தமன் எண்ணியபடியே, சோழ தேசம் வனப்புப் பெற்றது. காவிரி கடைசியில் காவிரிபூம்பட்டினத்தில் கடலுடன் கலக்கிறாள். அந்த காலத்தில், காவிரிபூம்பட்டினத்துக்கு, 'சம்பாபதி' என்று பெயர். இத்தகைய அழகிய பாடலை இயற்றியவர் யாரென எனக்கு தெரியவில்லை. காஞ்சி மஹாபெரியவரின் 'அருளுரை' யில் படித்ததாக நினைவு.

இப்போது கரைகொள்ளாமல் ஓடும் காவிரியை கூடிய சீக்கிரம் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்....:)

செவ்வாய், டிசம்பர் 20, 2005

வல்லவரையன் வந்தியத்தேவன்

ஒரு ஆறு வருட காலம் முன்னால் 'பொன்னியின் செல்வன்' படித்தேன். படித்ததிலிருந்து, வல்லவரையன் வந்தியத்தேவன் மேல் ஒரே காதல் தான்! :) இப்பொழுது, மறுபடியும் படிக்கிறேன். வந்தியத்தேவன் மீது பற்றுக் கொண்டு, Google இணையதளத்தில் அவன் பெயரைப் போட்டால் என்னதான் வருகிறது பார்ப்போமே என்று போட்டேன். அப்போது கிடைத்த ஒரு தளம் இது.
அதிலிருந்து கிடைத்த இன்னொரு தளம்: www.varalaaru.com
தமிழ் சரித்திர வரலாறு பற்றிய e-zine ஆரம்பித்திருக்கிறார்கள். வந்தியத்தேவன் எந்தெந்த ஊருக்கெல்லாம் 'பொன்னியின் செல்வ'னில் சென்றிருந்தானோ, அந்த ஊருக்கெல்லாம் சென்று கருத்து சேகரித்திருக்கின்றனர்! பார்க்கவே மிக சந்தோஷமாக இருந்தது...:)

காதல் கவிதை!

'ஐ லவ் யூ' விகடன் ஸ்பெஷலில் நடிகர் பரத் 'காதல் பத்து' என்று ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் அவர் எழுதிய காதல் கவிதை எனக்கு பிடித்திருந்தது:

உயரத்தில் இருப்பதால் நீ நிலாதான்!
ஆனால் உன்னையே நீ பார்க்க என்னிடம் தான் வர வேண்டும்!
ஏனெனில்,
காதல் நீர் நிறைந்த குளம் நான்!

நிலவும், தாமரை குளமும், அல்லி தண்டுகளை வைத்தும், பல ஆயிரம் காலங்களாக ஸ்ருங்கார ரசத்தில் கவிதை வரித்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அதையே புதிதான வகையில் புனைந்தால் இன்றும் ரசிக்கத்தான் செய்கிறோம். காதல் என்றும் இளமையானதன்றோ? :) 'அடடா, என்னால் இப்படி எழுத முடியவில்லையே' என்று ஆதங்கப்பட வைத்த கவிதை இது!

வியாழன், டிசம்பர் 01, 2005

அன்பே சிவம்

ப்ரியா "சிந்தனை சிதரல்" என்று அவருடைய வலைப்பதிவில் எழுதி வருகிறார். மனநோயாளிகள் பற்றியும், அவர்களை குணமாக்குதல் பற்றியும் மிக அழகான சில விஷயங்களை கூறியிருக்கிறார். ப்ரியாவின் சிந்தனைகள் சிதறி என் மனதில் சில எண்ணங்களை கிளப்பின...

என்னுடைய உறவுக்காறர் ஒருவருக்கு மன வளர்ச்சி குன்றிய ஒரு பையன் இருக்கிறான். குழந்தை பிரசவத்தின் போது, பிரசவம் பார்த்த நர்ஸ் ஒரு பிழை செய்ததால் குழந்தையின் மூளைக்கு ரத்த ஓட்டம் ஒரு நோடி போகாமல் மூளை வளர்ச்சி குன்றி விட்டது என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். வயது பல ஆனாலும், இரண்டு வயதிற்குறிய ஒரு குழந்தையின் மன வளர்ச்சிதான் அவனுக்கு. இரண்டு வயது குழந்தையை கையாள எவ்வளவு பொறுமை வேண்டுமோ, அதே பொறுமையுடன் தான் அவனையும் நடத்த வேண்டும். சிசுருஷை செய்ய வேண்டும். அவனது தாய், தந்தையர் நான் மிகவும் வியக்கும், மதிக்கும் மனிதர்கள். அசாத்திய பொறுமைசாலிகள். "அய்யோ, நமக்கு இப்படி நேர்ந்து விட்டதே!" என்று அங்கலாய்த்துக் கொண்டு, சதா அழுது கொண்டிருக்காமல், அதையும் மீறி வாழ்க்கையை சுவாரஸ்யத்துடன் நடத்தும் பாராட்டுதற்குறிய மனிதர்கள் அவர்கள். தன் குழந்தையை வெறுக்காமல், பொறுமையிழக்காமல், அவன் நிலைமையை உணர்ந்து அவனை மிக்க பாசத்துடன், அவனை அரவணைத்து அவனுக்கு உதவும் நல் மனது மிக்கவர்கள்.

ஏதோ மனநோய் காரணமாக மருந்து உண்டு, மிக பருமனாக இருக்கும் பெண்ணை அவர்கள் வீட்டாரே வெறுப்பதாக ப்ரியா எழுதியிருந்தார். சாதாரணமாகவே ஏதோ ஊனம் இருப்பவரை கண்டாலோ, அல்லது சற்று அழகு குறைந்து காணப்பட்டவரை பார்த்தாலோ, மனிதர்களுக்கு ஏளனமும், அருவருப்பும் தான் முதலில் வருகிறது. இந்த மனப்போக்கு குழந்தை பருவத்திலோ, டீனேஜ் பருவத்திலோ வரும் மனப்பக்குவமில்லாத response என்று நான் நினைத்த காலமுண்டு. ஆனால் வயதும், அனுபவமும், படிப்பும் மிக்க மனிதர்களும் இப்படித்தான் அருவருப்படைகிறார்கள் என்று ஒரு கசப்பான பாடம் பின்னர் கற்றுக்கொண்டேன். இதில் ஒரு superiority complex வேறு சிலபேருக்கு. "எனக்கு இப்படியெல்லாம் இல்லை. நான் உயர்ந்தவன்!" என்று ஜம்பமாக அவர்கள் மனதில் நினைப்பது முகத்திலேயே பிரதிபலிக்கும். மேலும் சிலர், "இவர் ஏதோ பாவம் செய்திருக்கிறான். நன்றாய் வேண்டும்.நான் பெரிய புண்யாத்மாவாக்கும்" என்று தேவையில்லாத ஆன்மீகத்தை புகட்ட பார்ப்பார்கள். அந்த பையன் அருகில் வந்தாலே ஏதோ தீண்டத்தகாதவன் அருகில் வந்த மாதிரி, விலகி போவார்கள். அவன் ஏதாவது கேட்டால் எரிந்து விழுவார்கள். அவனுடைய நிலைமை அவனை மீறியது என்பதை அறியாமல் நடந்து கொள்வார்கள். நான் இதை கண்கூடாக பார்த்ததினால் தான் ப்ரியாவின் பதிவு எனக்கு பிடித்திருந்தது.

என்னை பொறுத்த வரையில், நமக்கு ஒன்று நேர்ந்து விட்டால் சமாளிப்பது அவ்வளவு பெரிய காரியம் இல்லை. ஏனென்றால், வேறு வழி கிடையாது, சமாளித்து தான் ஆக வேண்டும். பிறர் துன்பப்படும் போது, கண்ணை மூடிக்கொண்டு போய்விடலாம். கண்ணை விட்டு அகன்றதும், அந்த காட்சி மறந்தும் போய்விடும். ஆனால் என்ன தர்மசங்கடமான விஷயமாயிருந்தாலும், அதை எதிர்நோக்குவது கடினமல்லவா? பிறர் படும் கஷ்டத்தை புரிந்து கொண்டு அனுசரணையாக நடந்து கொள்ள மன வலிமையும், ஆத்மபலமும் வேண்டும். அழ்ந்த அன்பினாலேயே வரக்கூடிய குணங்கள் அவை என்று நான் நினைக்கிறேன்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இவ்வளவு மூளையுள்ள, சுவாதீனமுள்ள மனிதர்கள் பாசமாக நடந்து கொள்வதில்லை. ஆனால், அந்த பையனோ மனிதர்கள் மீது மிகவும் பாசமாக இருப்பான். வீட்டிற்கு யார் வந்தாலும், வாஞ்சையுடன் "காபி சாப்பிடறியா?" என்று கேட்பான். அவர்கள் கோபப்பட்டால் கூட பொருட்படுத்தாமல், "மறுபடியும் எப்போ வர? பார்க்கணும் போல இருக்கு..." என்று விடைகூறுவான். ஆத்திகமும் நாத்திகமும், நல்லதும் கெடுதலும், சரியும் தவறும் உணர்ந்தும் புரிந்துகொள்ளுதல் இல்லாமல் இயங்கும் மனிதர்கள் மேலா? எதுவுமே அறியாமல், தன்னை வெறுபோரிடமும் பாசமாக நடந்து கொள்ளும் அவன் மேலா?

"ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்"

என்ற வரிகள் தான் மனதிற்கு நினைவு வருகின்றன....