சனி, ஏப்ரல் 30, 2005

சில எண்ணங்கள்...

வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் எழுதுகிறேன். தமிழ்ல் எழுத ஆசைப்படும் போது, ஜில்லென்று பொதிகை மலை காற்று போல் , சிந்தனைகள் தமிழிலேயே ஓடுவது மிக பிடித்திருக்கிறது....

தமிழ்நாட்டுக்கு நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது தான் முதலில் வந்தேன். சென்னையில் பிற்ந்திருந்தாலும், அப்பாவின் வேலை காரணத்தால், ஒரிஸ்ஸா-விலேயே தான் வளர்ந்தேன். தமிழை விட ஒரியா தான் நன்றாக தெரியும். தமிழில் யாராவது சற்று வேகமாக பேசினால் கூட எனக்கு புரியாது. சென்னையில் பள்ளிக்கூடத்தில் முதல் தரம் தமிழ் பாடத்தில் 0/100 வாங்கியது நினைவிருக்கிறது.....:) என் classmates எனக்கு தமிழ் சரியாக வராததால், எதிலும் சேர்த்து கொள்ளாமல் விட்ட போது அப்பாவிடம் சென்று அழுதது; அப்பாவும் அம்மாவும் "தமிழ் கற்று கொண்டால் போச்சு!" என்று ஆறுதல் அளித்தது; அம்மா பல நாட்கள் என்னுடன் அமர்ந்து உயிர் எழுத்தும், மெய்யெழுத்தும் சொல்லி கொடுத்தது; Doordarshan-இல் எப்போதோ தமிழ் நிகழ்ச்சிகள் வரும்போது, concentration-ஒடு அமர்ந்து, ஒவ்வொரு வார்த்தையும் கேட்டது, எழுத்துக் கூட்டி படித்தது; எனக்கு சரியாக புரிந்து விட்டால், சந்தோஷத்தில் அம்மாவை சென்று கட்டிக் கொண்டது! எல்லாம் பசுமையான நினைவுகள்.

பல வருடங்கள் ஓடிவிட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில், முத்தமிழ் சங்கம் வளர்த்து, அந்த முக்கண்ணன் திருவிளையாடல் புரிந்த பாண்டிய தலைநகரமாம் மதுரை மாநகரத்திலும் இருந்தாகிவிட்டது. மதுரை தமிழ் வாசம் என்றும் மணம் கமழும்! அதை கேட்கையில், என் அகம் மகிழும்!அதற்கு பின் திருவரங்கம். தென்கங்கையாம் காவிரியிலிருந்து 100 அடி தூரத்தில் வீடு. அரங்கன் கோவில் கூப்பிடு தூரம். அப்பாவின் தூண்டுதலாலும், சில நண்பர்களாலும், தமிழில் நிறைய படிக்க நேர்ந்தது! நான் வாழ்க்கையில் மிகவும் ரசித்த சம்பவங்கள் அங்கு நடந்ததாலோ, சுவாரஸ்யமான பல மனிதர்களை அங்கு சந்திக்க நேர்ந்ததாலோ அல்லது என் மனம் கவர்ந்த அரங்கன் அங்கு குடி கொண்டிருப்பதாலோ, சோழ சாம்ராஜ்யத்தின் பல அற்புதமான மன்னர்கள், அவர்கள் கலை, தர்மம், கதை, கோவில்களாலோ தெரியவில்லை நான் திருவரங்கத்தின் மேல் மோகம் கொண்டேன்...தமிழ் மீதும், காவிரி மீதும், தமிழ் பண்பாட்டின் மீதும், கலை, சிற்பம், சங்கீதம், எழுத்து, அனைத்தும் நிறைந்திருக்கும் தமிழ்நாட்டின் மேல் மோகம் கொண்டேன்.

இந்த இணையதளத்தில், அங்கு நான் சென்ற சில இடங்கள், என்னை கவர்ந்த சில ஊர்கள், கோவில்கள் பற்றி எழுத விரும்புகிறேன். என் தமிழ்ப் புலமை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு கிடையாது. அதனால் வாசகர்கள் பொருத்துக் கொள்ளவும்....:) இனி விரைவில் அடுத்த பதிவை எதிர்பார்க்கவும்..