திங்கள், ஜனவரி 09, 2006

காட்டழகிய சிங்கபெருமாள்

திருவரங்கத்துக்கும் திருவானைக்காவுக்கும் நடுவில் ஒரு இரயில்வே க்ராசிங் உள்ளது. திருவரங்கம் இரயில்நிலையம் அருகே இருக்கும். அதைத் தாண்டி அப்பால் சென்றால் திருவானைக்கா. திருவரங்கம் கிழக்கு வெள்ளை கோபுரத்துக்கு நேர்கோட்டில், திருவானைக்கா பக்கத்தில் உள்ளது ஸ்ரீ காட்டழகிய சிங்கபெருமாள் கோவில். பெரிய ஆடம்பர கோபுரங்களோ, மாடங்களோ எதுவும் இல்லாத மிக எளிமையான கோவில். அண்மையில், மூன்று வருடங்களுக்கு முன்னால் கும்பாபிஷேகம் செய்வித்தார்கள். திருவரங்கம் கோவில் நிர்வாகத்தை சேர்ந்த கோவில்.

பெருமாள் அழகிய நரசிம்மமூர்த்தியாக காட்சியளிக்கிறார். இடது தொடையில் தாயாரை மடியில் வைத்து, ஒரு கையால் அணைத்து கொண்டு இருப்பார். இன்னொரு கையால் அபயஹஸ்தம் அளித்துக்கொண்டிருப்பார். பெரிய, தத்ரூபமான மூர்த்தி. என்னதான் பயமுறுத்தும் தோற்றமுடையவராயிருந்தாலும், முகத்தில் ஒரு புன்முருவல் பூத்திருக்கும்.

முன்காலத்தில், இப்பகுதிகளில் அடர்ந்து மண்டி கிடந்த காடுகளில் யானைகள் அட்டகாசம் தாங்காமல், காட்டினிடையே சிங்கபெருமாள் கோவில் அமைத்திருக்கிறார்கள். கேசரி கஜராஜனுக்கு இயற்கை பகைவனாயிற்றே? நான் ஸ்ரீரங்கம் சென்ற புதிதில், எனக்கு மிகவும் பொழுது போகாது. பெரிய நகரங்களில் உள்ள பொழுது போக்குகளோ, hang-outs அங்கு கிடையாது. சரித்திரத்திலும், அந்தகால கோவில் கட்டிடக்கலையிலும் ஈடுபாடு உண்டென்பதால், திருச்சியை சுற்றியிருக்கும் பல கோவில்களை சென்று பார்ப்பதிலேயே பொழுது போக்குவேன்.

ஒரு நாள், திருவரங்கம் கோவிலில் கூட்டம் ஆளை நெரித்துவிடும் போல் இருந்தது. கோவிலிருந்து விடுபட்டு, சற்று காற்று வாங்கினால் போதும் என்று எனக்கு ஆகிவிட்டது. அதனால், ஒரு நோக்கமே இல்லாமல், திருவரங்கம் இரயில் நிலையத்தை பார்த்து நடந்தேன். அங்கு சற்று காற்று வரும். அந்த நேரத்தில், எந்த வண்டியும் வராது. அப்போதெல்லாம், மனத்தில் அமைதியில்லாமல் எதையோ நினைத்து தவித்த காலம். கொஞ்சம் தனிமையில் இருக்கலாமே என்று சென்றேன். அப்போது தூரத்தில் விளக்கு எரிவது தெரிந்தது. அதை நோக்கி கால்போன போக்கில் நடந்தேன். சென்றால், காட்டழகிய சிங்கர் கிடைத்தார்!

அப்போதெல்லாம் அந்த கோவிலில் அதிக ஜனநடமாட்டம் கிடையாது. வெரிச்சோடியே இருக்கும். சாந்தி குடிகொண்டிருக்கும். ஸ்ரீரங்கத்தின்அலை மோதும் ஜன சமுத்திரத்துக்கு நடுவே ஒரு அமைதித்தீவாகவே அந்த திருக்கோவிலை நாடி செல்வேன். இப்போதெல்லாம், அங்கும் கூட்டம் ஜாஸ்தியாகிவிட்டது. ஒரு வகையில் நல்லது தான். வருகிற திரவியத்தால் கோவில் திருப்பணி நடக்க உதவுமே!

நாளை வைகுண்ட ஏகாதசி உத்சவம். திருவரங்கத்தின் சுவர்க்க வாசல் திறக்கும். திருவரங்கம் வைகுண்டமாக உருவெடுக்கும். காவிரி, வைகுண்டத்தின் விராஜ நதியாகவே மாறி விடுவாள். எல்லோருக்கும் எனது தாமதமான இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!