சனி, பிப்ரவரி 11, 2006

காதல் - 1!

'காதலர் தினம்' வெகு அருகில் இருக்கிறது. அன்று பதிவு எழுத நேரம் கிடைக்கிறதோ இல்லையோ. இன்றே எழுதி விடுகிறேன்..:) காதலைப் பற்றி என்னமோ அறிவுஜீவித்தனமாக எழுதலாம் என்று நினைத்திருந்தேன். 'உனக்கு அவ்வளவு அதிகபிரசங்கித்தனமா?' என்று ஆண்டவன் வைத்தான் ஒரு ஆப்பு. காலை கையில் காபியுடன் சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்' படித்துக் கொண்டிருந்தேன். அதில் மார்ட்டின் கார்ட்னரின் ஒரு குட்டி கதையை சுஜாதா மொழிப்பெயர்த்திருந்தார். எனக்கு பிடித்திருந்தது. அதை சுஜாதாவிடமிருந்து சுட்டு இதோ கீழே போட்டிருக்கிறேன் (கற்றதும் பெற்றதும்- 'ஜீனோம்'). சுஜாதா மன்னிப்பாராக! -

ஒரு பெரிய விஞ்ஞானி சாகும் தறுவாயில் இருந்தார். அவரருகே அவருடைய காதலி ரோசாலி உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு அவர் மேல் மிகுந்த காதல். விஞ்ஞானிக்கு முதல் காதல் விஞ்ஞானம் தான்.அப்புறம்தான் ரோசாலி.

"நாம் நிச்சயம் மறுபடி சந்திப்போம்....எங்கேயாவது, எப்போதாவது.." என்றாள்.

விஞ்ஞானி கஷ்டப்பட்டு இருமிக்கொண்டு சொன்னார்: "அபத்தமாக பேசாதே..உனக்கு விஞ்ஞானம் தெரியாதா..?"

ரோசாலிக்கு நிஜமாகவே விஞ்ஞானம் தெரியாது.
"ஆனால், நிச்சயம் நாம் சந்திப்போம் என்று நம்பிக்கை வைக்க மாட்டாயா..?"

விஞ்ஞானி தலையாட்டினார். "எனக்கு ஒரு வாழ்நாள் போதும்..எளிதாக,அழகாக அது முடிவடைகிறது...இல்லையேல் பிரபஞ்சம் மிகவும் சிக்கலாகிவிடும்.."

அவர் இறந்துபோனார்.

சில லட்சம் வருடங்கள் கடந்த பின் விஞ்ஞானி திடீரென்று கடவுளுக்கு முன் தான் நிற்பதை உணர்ந்தார். அவருக்கு குழப்பமாக இருந்தது.

"எனக்கு புரியவில்லை...எப்படி விஞ்ஞான விதிகள்படி நான் மறுபடி வாழ முடியும்?"

'எப்படி விஞ்ஞான விதிகளின்படி விஞ்ஞான விதிகள் வரமுடியும்?' என்று கடவுள் கேட்டார்.


'ஆனால் நான் மறுபடி வாழ விரும்பவில்லையே..திருப்தியுடன் வாழ்ந்தேன்...இறந்தேன். ஏன், எதற்காக இங்கே இருக்கிறேன்..?"

"நீ இங்கே இருப்பதற்கு ஒரேயொரு காரணம் ரோசாலி வேண்டிக்கொண்டது தான்" என்றார் கடவுள்.

இந்த கதையின் உள்ளர்த்தத்தை இரவின் தனிமையில் யோசித்துப் பாருங்கள்.

நானும் சற்று நேரம் யோசித்தேன். எனக்கு தோன்றியதை நாளைக்கு பதிவாக போடுகிறேன். அதற்குள்ளாக, உங்களுக்கு என்ன தோன்றியது என்று சொல்லுங்கள்...:)

ஞாயிறு, பிப்ரவரி 05, 2006

உடையார்

இம்முறை இந்தியா சென்றபோது, மும்பையிலேயே வாசம் எனக்கு. அதிகமாக பரிச்சயம் இல்லாத ஊர் என்பதாலும், எங்காவது செல்லலாம் என்று கிளம்பினால் குறைந்தபட்சம் 1 மணி நேரம் டிராபிக்கில் மாட்டி கொள்வோம் என்ற பயத்தினாலும், நண்பர்கள் யாரும் அங்கு இல்லாததாலும், வீட்டில் இருந்த புத்தககங்களை எல்லாம் எடுத்து புரட்டி பார்த்து கொண்டிருந்தேன். முன்பொரு முறை பாலகுமாரனின் 'உடையார்' குமுதத்தில் தொடராக வந்து கொண்டிருந்தது. அப்போது அதை படிக்கும் மனப்பக்குவமும் இல்லை. என் அப்பாவுடைய நண்பர் ஒருவர் 'உடையார்' பரிந்துரைத்தார். படிக்க ஆரம்பித்தேன். முதலில் பிடிக்கவில்லை. பிடிக்கவில்லை என்று சொல்வதைவிட, வித்தியாசமாக இருந்தது என்றே சொல்லவேண்டும். கல்கியின் நடையை படித்துவிட்டு, இதை படிப்பவர்களுக்கு கண்டிப்பாக முதலில் சற்று மாறுதலாக தான் இருக்கும். 'பொன்னியின் செல்வ'னின் தொடர்ச்சியாக இதை பார்க்க தோன்றும். எனக்கு அப்படிதான் இருந்தது. பிறகு, அந்த நினைப்பு இல்லாமல், இதை ஒரு தனிப்பட்ட இலக்கிய படைப்பாக ரசித்தல் வேண்டும்.

உடையார் என்பது அரசரை குறிப்பது. நாடு, மக்கள், செல்வம், வெற்றி, அழகு, பண்பு என்று அனைத்தும் உடையவனாதலால் அரசன் 'உடையார்' என்று அழைக்க படுகின்றான். இந்த படைப்பு முற்றிலும் ராஜராஜ சோழனுக்கே உரியது. ராஜராஜ சோழன் சிம்மாசனம் ஏறி 23 ஆண்டுகளுக்கு பிறகான காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்கள். வந்தியத்தேவனுக்கு மூட்டுவலி, குந்தவைக்கு முதுகுவலி, பொன்னியின் செல்வனுக்கு ஜலதோஷம் என்று படிக்கும்போது சற்று அதிர்ச்சியாக இருந்தது..:) எல்லோருக்கும் வயதான காலத்தில் கதை நடக்கிறது என்பதை ஒத்துக்கொள்ள எனக்கு சற்று நேரம் பிடித்தது. முக்கியமாக தஞ்சை பெரிய கோவிலின் படைப்பும், அதற்கான முயற்சிகள், அதனாலான பாதிப்புக்கள், மக்கள் வாழ்க்கை மாறுதல்கள், இவைகளை சுற்றியே கதை புனைந்திருக்கிறார். இதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் சரித்திர ஆதாரம் பெற்றவர்கள். எதுவுமே கற்பனை கிடையாது.

ஒரு கட்டிடம் கட்டுவது என்பது இந்த காலத்தில் அவ்வளவு பெரிய விஷயமில்லை. அதற்குண்டான சாமான்கள், பொருள் வசதி, ஆட்கள், அவர்களை நகர்த்த வண்டிகள், வசதியான சாலைகள், கட்டிட கணக்குகளை பார்க்க கணிணி, அளவுகளை துல்லியமாக போட்டு கொடுக்க மென்பொருள் என்று அனைத்துமே சுலபம்தான். அந்த காலத்தில் இதெல்லாம் எவ்வளவு கடினம் என்பதை அழகாக உணர்த்தியது 'உடையார்'. காவிரி பாயும், அழகிய விளைநிலங்கள் கொண்ட சமதரையான சோழ ராஜ்யத்தில் கற்கள் எப்படி கொண்டு வருவது? ஆட்கள் யாரைக்கொண்டு கோவில் கட்டுவது? எங்கு தங்க வைப்பது? ஒரு இடத்தில் கூடியிருக்கும் அவ்வளவு பெரிய ஆட்படைக்கு உணவளிப்பது எப்படி? அதனால் சமூகத்தில் எவ்விதமான மாறுதல்கள் ஏற்படும்? பொருள் கொண்டு வருவது எப்படி?

இந்த காலத்தில் இவ்வளவு வசதியிருந்தாலும், தொழில்நுட்பம் இருந்தாலும் நமக்கு தஞ்சை பெரிய கோவிலை போல ஒரு படைப்பை அமைக்க முடியவில்லையே! உலகத்தில் நம் நாட்டில் மட்டும்தான் கலாசாரம், கலை இருந்தது என்று சொல்வது முட்டாள்தனம். ப்ரான்சில் 'வெர்சாய்' அரண்மனை, லண்டனில் 'செயின்ட் பால்' என்று உலகெங்கும் மனிதன் படைப்பாளியாகத் தான் இருந்திருக்கிறான். ஆனால், ஐரோப்பா 'dark ages'ல் காட்டுமிராண்டித்தனமாக இருந்தபோது, செந்தமிழ்நாட்டில் மிக பண்புடைய, அறிவுடைய, தெய்வபக்தியும், தர்ம சிந்தனையும் உள்ள ஒரு அரசன் நெறி வழுவாமல் ஆட்சி புரிந்தான் என்பதை நினைக்கையில் பெருமையாக இருக்கிறது! :) உலகில் எத்தனையோ பெரிய அரசர்கள் இருந்தாலும், தர்மத்துக்கு தலைவணங்கி ஆட்சி செய்தவர்கள் இந்தியாவில் தான் இருந்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. தனக்கென்று அரண்மனைகளையும், மாடமாளிகைகளையும் அமைத்துக் கொள்ளாமல், சிவனுக்கு ஆலயம் அமைத்திருக்கிறான் ராஜராஜன். செந்தமிழில் நால்வர் பொழிந்த அமுதான தேவாரப்பாடல்களை அழியாமல் மீட்டு கொடுத்து 'சிவபாதசேகரன்' என்ற பட்டம் பெற்றவன். பெளத்தமும், ஜைனமும் தலைதூக்க விடாமல் சைவமதம் தழைத்தோங்குவதற்கு அடிகோலியவன். அந்த கால தமிழர் நாகரீகமும், கலையும், பக்தியும் உலகமறியும் சின்னமாகவே தஞ்சை பெரிய கோவிலை அமைத்திருக்கிறான். முயற்சி வீண்போகவில்லை! இன்றும் கம்பீரமாக இராஜராஜன் பெயரை சொல்லி வானளாவி நிற்கிறது பெரிய கோவில்.

11 பாகங்கள் வெளிவந்திருக்கின்றன. இன்னும் இரண்டு பாகம் வரும். நிச்சயமாக ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டும். ஆவலுடன் காத்திருக்கிறேன்.

பின்குறிப்பு:

'பொன்னியின் செல்வன்' ரசிகர்களுக்கு ஆதித்த கரிகாலன் கொலைக்கு யார் காரணம், அவர்கள் என்ன ஆனார்கள், உத்தம சோழன் ஆட்சி எப்படியமைந்தது, வந்தியத்தேவன் என்னவானான் என்ற பல கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது..:) நீங்கள் எதிர்பார்க்காத பதிலாகக் கூட இருக்கலாம்!