நான் நினைத்த மாதிரியே, வெகு நாட்கள் எழுதமுடியாமல் போய்விட்டது. வாசகர்கள் பொறுத்துகிட்டதுக்கு நன்றி! :)
"காதல் ஒரு தேவையில்லாத எமோஷன் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கைகளில் ஒன்று."- சுஜாதா.
அண்மையில், சுஜாதா ஆ.வி யில் காதலைப் பற்றி எழுதிய மற்றுமொரு கட்டுரை படித்தேன். மனிதர், காதலை அக்குஅக்காக பிரித்து எடுத்து, 'அது வெறும் இயற்கையின் தூண்டுதலுக்கு கொடுக்கப்பட்ட நாகரீகப் பெயர்' என்ற ரேஞ்சுக்கு எழுதியிருந்தார்! விஞ்ஞான பூர்வமாக உண்மைதான். ஆனால், அப்படி பார்த்தால் மனித உடலென்பதே வெறும் ரசாயனங்களின் விளையாட்டு. மனித மனது என்று ஒரு வஸ்து கிடையவே கிடையாது. அது பல ந்யூரான்களின் இணைப்பால் விளையும் மின்சக்தி பிரவாகம். ஒவ்வொரு விதமாக அந்த பிரவாகம், நியூரான்கள் வழி சென்றால் (Neuronal pathways), ஒவ்வொரு விதமான எண்ணம்/உணர்ச்சி மனதினில் உருவாகிறது. இப்படியெல்லாம் யோசித்தால், அப்புறம் எல்லாமே மாயை என்கிற ரீதியில் தோன்றிவிடும். 'எல்லாம் மாயை' என்பது உயர்ந்த சித்தாந்தம். அதை மனதின் ஒரு மூலை உணர்ந்தாலும், அதை முழுமையாக ஏற்றுக் கொள்ள மனப்பக்குவம் வேண்டும். அதனால், என் சிறு மூளைக்கு எட்டியவரை 'காதல்' என்று ஒன்று இருக்கிறது என்றே வைத்து கொள்கிறேன்..:)
ஆனால் எதை 'காதல்' எனக் குறிப்பிடுகிறோம்? ஆங்கிலத்தில் எல்லாவற்றையுமே பொதுப்படையாக 'love' என்று தான் கூறுவார்கள். நடைமுறைத் தமிழில் அப்படியல்ல. இருபாலருக்கிடையே ஏற்படும் romantic love மற்றுமே இப்போது 'காதல்' என அழைக்கின்றனர். ஆனால், காதலோ பல வகைப்பட்டது. நம் தாய் தந்தையரிடம் வைக்கும் பாசம், கால்நடை பிராணிகளை பார்த்து ஏற்படும் பரிவு, வீட்டில் பூனை நாய்களிடம் காட்டும் பிரியம், நண்பர்களிடம் பாசம், யாரோ ஒரு வழிப்போக்கரிடம் ஏற்படும் பச்சாதாபம் எல்லாமே காதலின் பரிணாமங்கள் தான்!
"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்குய்ப்பதுவும்
வேதம் நான்கிலும் மெய்ப்பொருளாவதும்
நாதன் நாமம் நமச்சிவாயவே!"
என்று அப்பர் பெருமான் தேவாரத்தில் பாடியதும் காதல் தான்! ஆனால் அதை கொச்சையாகப் பார்க்க தோன்றுகிறதா? நான் என்ன சொல்ல வரேன்னா, ஒரு வகையிலாவது காதலை உணராதவர்கள் உலகில் இல்லை. ஆனால் அதற்கு வேறு பெயர் சூட்டி அழைக்கலாம்.இதைத் தான் சுஜாதா கூறியிருக்கலாம்.
அதற்காக காதல் தெய்வீகமானது என்று எல்லாம் டயலாக் அடிக்க விரும்பவில்லை! என்னை பொறுத்த வரையில் காதலைப் பற்றி ரொம்ப ஓவராக ஹைப் கொடுத்து, டயலாக் அடிச்சே கெடுத்துட்டாங்க. எதிர்ப்பாலரிடம் ஈர்ப்பு ஏற்படுவது இயற்கை. வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையை நாம் கடந்து செல்ல செல்ல, அந்த ஈர்ப்பும் உருமாறும்; அன்பும் வேறு வகையாக வளரும். Growing old together is perhaps the best way to describe love. 'நான் வானத்தில் குதித்தேன். நிலவை பிடித்தேன். ஆகாசத்தில் பறந்தேன்' என்று சொல்வதெல்லாம் கவிதைக்காக. அப்படி அக்னி ஜ்வாலையாக, மனிதரை அழிக்கும் வகையிலும் காதல் பிறக்கலாம். அதற்காக, 'எனக்கு அப்படியெல்லாம் தோன்றவில்லை. அதனால் எனக்கு காதல் இல்லை' என்று நிறைய பேர் உண்மை அன்பை நிராகரித்ததையும் பார்த்திருக்கிறேன். அமைதியாக, ஆரவாரம் இல்லாமல், தீபத்தில் சுடர்விடும் அழகிய நெருப்பு முத்து போல் மிதக்கும் காதலும் ஏற்படலாமே?!?!
இந்த கதைக்கு பல பேர் தங்கள் கருத்துக்களை எழுதியிருக்கிறீர்கள். எனக்கு விதியில் நம்பிக்கை உண்டு. அன்பின் சக்தியிலும் நம்பிக்கை உண்டு. Faith moves mountains, என்று ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உண்டு. ரோசாலியின் அபிரிமிதமான நம்பிக்கைக் காரணமாக விஞ்ஞானி பிறக்கிறாரோ? கடவுளே இல்லை என்று நினைத்த விஞ்ஞானிக்கு, கடைசியில் கடவுள் முன் நிற்பதே ஒரு irony. ரோசாலியின் அன்பின் பிணைப்பு ஒரு வேளை அவரை பூமிக்கு கட்டுண்டு இழுத்திருக்கலாம்! எத்தனையோ விதத்தில் விவரிக்கலாம். உங்கள் எண்ணங்களும் சரியென்றே தோன்றுகிறது! விஞ்ஞானத்துக்கும், சாத்திரத்துக்கும் அப்பாற்பட்ட அன்பின் சக்திதான் இந்த உலகை ஆட்டுவிக்கிறது என்பதில் எனக்கு அளவுக்கடந்த நம்பிக்கை!
அண்மையில் படித்த காதல் கவிதை ஒன்று. (http://www.nilacharal.com/stage/kavithai/tamil_poem_246b.asp)
என் ப்ரியமானவனே...
மல்லிகைப்பூவின்
இதழ் போல்
மிருதுவாய்
உன் பிடிவாதம்.
அழுதபின் தோன்றும்
நிறைந்தெ அமைதியாய்
உன் மெளனம்.
பொம்மைகளுடன்
சண்டையிடும் குழந்தையாய்
உன் கோபம்.
உயிர் நனைக்கும்
அதிகாலை பனித்துளியாய்
உன் ஸ்பரிசம்.
பெண்மையின் மென்மை
உணர்ந்த உன்
ஆண்மையால்
தினம் புதிதாய் பிறக்கும்
பூவாய் நான்!
-நிலாரசிகன்
செவ்வாய், மார்ச் 21, 2006
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)