ஞாயிறு, செப்டம்பர் 24, 2006

திருவிடைமருதூர்

"தேக்கும் வரகுணனாந் தென்னவன்கண்சூழ் பழியைப்
போக்கும் இடைமருதிற் பூரணமே." - அருட்பா

எனக்கு சோழநாட்டு திருத்தலங்கள் மீது தனிப் பற்று. அதை நான் இன்று சொல்லி தான் தெரியவேண்டும் என்பது இல்லை! இந்த மின்பதிவில் அதைப்பற்றி எழுதி எழுதியே உங்களை எல்லாம் ரம்பம் போட்டிருக்கிறேன்..:) பல வாசகர்கள் என்னுடைய மின்பதிவில் இதையே குறையாகக் கூறியிருக்கிறார்கள்...:) எப்பொழுதும் கோவில்கள் பற்றியே எழுத
வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். ஆனால், ஒரு சில விஷயங்கள் ரத்தத்திலே கலந்தவை.

நான் சிறு வயதில் மதுரை, சென்னை, ஒரிஸ்ஸா என்று பல இடங்களில் வசித்திருக்கிறேன். 'என்னுடைய ஊர் இது' என்றெல்லாம் எந்த ஒரு ஊரையும் நினைத்ததில்லை. திருச்சியில் நான்கே ஆண்டுகள் இருந்தாலும், அந்த ஊரிலும், அதன் சுற்றுப்புறங்களுலும் ஏற்ப்பட்ட ஒரு பற்று வேறு எந்த இடத்திலும் எனக்கு இல்லை. 'இதுதான் உன் வீடு. இதுதான் உன் மண்' என்று ஒரு நினைப்பு பலமாக அடிக்கடி தோன்றும். பேருந்தில், கல்லூரி முடிந்து ஸ்ரீரங்கம் செல்லும்போது, காவிரிப் பாலத்தை தாண்டவேண்டும். அந்த இரண்டு நிமிடத்துக்காக தினம் காத்திருப்பேன். காவிரியை கடக்கையில், அந்த வளமான நதியையே ஆசையோடு பார்ப்பேன். மனதில் ஒரு அமைதி பரவும்.

இந்த உணர்வு ஒரு மனிதனுக்கு ஒரு இடத்தில்/ஊரில் மட்டுமே தோன்றும். அதை ரத்தத்தில், நாடி நரம்பில், மனதில், ஊனில் உணர முடியும். இந்த உணர்வு தரும் ஒரு adrenalin rush-ல் தான், கார்கிலில் போர்வீரர்கள் சண்டையிட்டனர். "இது என் தாய்மண். என்னுடைய மண்" என்கிற உணர்வின் பலத்தாலேயே ஒரு போர்வீரன் வெற்றிவாகை சூடி, 'Yeh Dil maange more!" என்று கர்ஜித்தான். 'சோறுடைத்த சோழநாடு' என்று போற்றப்படும் தஞ்சை ஜில்லாவில், எங்கு சென்றாலும் எனக்கு இந்த உணர்வு தான் மேலோங்கும். அதனாலேயே, எனக்கு அதைப் பற்றி எழுதுவதில் ஒரு சுகம். வாசகர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்! :)

திருவிடைமருதூர் வரகுண பாண்டியன் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய தலம். காவிரி கரையில், வயல்களுக்கு நடுவே உள்ள அழகிய தலம். வரகுண பாண்டியன் கோவிலுக்குள் செல்லும்போது, பிரம்மஹத்தியை வாசலிலேயே நிறுத்தி வைத்துவிட்டு 'இதோ திரும்பி வருகிறேன்' என்று கூறிவிட்டு உள்ளே சென்றானாம். ஈசனை வழிபட்டு, இன்னொரு வாயில் வழியாக வெளியேறி பிரம்மஹத்தியை ஏமாற்றிவிட்டானாம்! இன்றும் அந்த பிரம்மஹத்தி காத்துக் கொண்டிருக்கிறது. ஆகையால், கோவில் நுழையும் அதே வாசலால் திரும்பக் கூடாது என்று ஐதீகம்.

தலைமருது (ஸ்ரீசைலம் - ஆந்திரா - மல்லிகார்ச்சுனம்), இடைமருது (திருவிடைமருதூர் - மத்தியார்ச்சுனம்), கடைமருது (திருப்புடைமருதூர் - நெல்லை மாவட்டம் - புடார்ச்சுனம்) என்று மூன்று தலங்கள். ஸ்ரீசைலத்துக்கும், திருப்புடைமருதூருக்கும் இடையில் இருப்பதாலேயே இடைமருது என்று அழைக்கப்படும். மருது (அர்ச்சுனம்) என்றால் மருதமரம். இதுவே தல விருட்சம். சுவாமி - மகாலிங்கேசுவரர், மருதவனேஸ்வரர். பெரிய லிங்க வடிவு. மிக, மிக அழகான கோவில். அதை விவரிக்க முடியாது. வயல்களுக்கு நடுவே, ஒரு சிறிய ஊரின் நடுவில், அமைதியான, பிரம்மாண்டமான சிவன் கோவில்.

பிரகார சுற்றில், கர்ப்பகிரகத்திற்கு பின்னால், இராவணன் கைலாய மலையை கைகளில் தாங்குவது போன்ற சிலை இருக்கிறது. ஈசன் காலால் அழுத்த, வலியில் நரம்பையே வீணையாக்கி, சாம கானம் பாடும் காட்சி. காம்போதி ராகம் பாடி சிவனார் மனம் குளிரவைத்தான். இன்றும், இரவில் அங்கு வந்து காதை தீட்டிக் கொண்டு கேட்டால், சாம கானம் கேட்கும் என்று சொன்னார்கள். எனக்கு ஒன்றும் கேட்கவில்லை...:)

இந்த கோவிலின் இன்னொரு சிறப்பு, இதை மையமாக வைத்து, இதைச் சுற்றி 'பரிவார தலங்கள்' உள்ளன. என்னளவில், தல மகிமை எல்லாம் மீறி, எனக்கு இந்த தலத்தை பிடிக்க ஒரு தனி காரணம் உண்டு...:) இராஜராஜ சோழன், பட்டத்துக்கு வருமுன், இந்த மகாலிங்கத் தலத்துக்கு வந்தான். 'மகாலிங்கம்' என்று பெயரைக் கேட்டு, மிக பிரம்மாண்டமான லிங்கம் இருக்கும் என எதிர்ப்பார்த்தானாம். அவனுக்கு சற்று ஏமாற்றம். 'உண்மையிலேயே ஒரு மகா லிங்கத்தை நான் ஸ்தாபிக்கிறேன். ஒரு மகா பெரிய கோவிலை இந்த ஈசனுக்கு நான் அர்ப்பணம் செய்கிறேன்' என்று உறுதி பூண்டான். அதுவே பிற்காலத்தில் தஞ்சை பெரிய கோவிலாக உருவெடுத்தது. இந்த ஒரு சம்பந்தத்தாலேயே, எனக்கு இந்த கோவில் பிடிக்கும்..:) இது அரசபக்தி...1000 காலம் ஆனாலும், இராஜராஜ சோழன் ஆண்ட அந்த மண்ணில் வசிக்கும் எவனுக்குமே இருக்கும் இந்த அரச பக்தி. இன்றும் தஞ்சையில் அருண்மொழி வர்மனின் பிறந்த நட்சித்திரமான 'ஐப்பசி சதய'த்தன்று மிக விமரிசையாக விழா நடத்துவார்கள்.

இராஜராஜ சோழனின் குருவான கருவூர்த்தேவராலும் பாடல்பெற்ற தலம் திருவிடைமருதூர். அண்மையில் "Temples of India" documentary-ல் ராஜராஜசோழனோடு ஒரு வயதான ஜடாமுடி முனிவரின் வரைபடமும் கண்டுபிடித்ததாக காண்பித்திருந்தனர். அவரே கருவூர்த்தேவர். அவர் இயற்றிய 'திருவிசைப்பா' ஒன்பதாம் திருமுறையை சேர்ந்தது.

இந்திர லோக முழுவதும் பணிகேட்(டு)
இணையடி தொழுதெழத் தாம்போய்
ஐந்தலை நாகம் மேகலை அரையா
அகந்தொறும் பலிதிரி அடிகள்
தந்திரி வீணை கீதமும் பாடச்
சாதிகின் னரங்கலந்(து) ஒலிப்ப
மந்திர கீதம் தீங்குழல் எங்கும்
மருவிடம் திருவிடை மருதே.

இவர் தஞ்சை பிருகதீஸ்வரர் கோவிலைப் பற்றியும் பாடியுள்ளார்.

குடந்தை, மயிலாடுதுறை அடுத்த முறை சென்றார், நிச்சயாமாக போய் தரிசிக்க வேண்டிய இடம்!