ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2005

மலைக்கோட்டை (தாயும் ஆனவர்)

திருச்சி மலைக்கோட்டையை சுற்றி பல கதைகள் கேள்விப்பட்டிருக்கிறேன். 'திரிசரன்' என்ற அசுரன் இறைவனை இங்கு வழிபட்டதால் 'திரிசரபுரம்' என்று பெயர்க்காரணம் கூறுவார்கள். கைலாய மலையிலிருந்து துகளாகி மூன்று பாகங்கள் பறந்து வந்ததாகவும், அதில் ஒன்று திருச்சி மலைக்கோட்டை என்றும் கதை இருக்கிறது. மூன்று குன்றுகளில் பிள்ளையார், தாயுமானவர் மற்றும் மட்டுவார்குழலியம்மன் அருள்புரிகிறார்கள்.

ரத்னவதி என்னும் கர்ப்பிணி பெண்ணுக்கு, தாயாக காட்சியருளி பிரசவத்துக்கு உதவிபுரிந்ததால், இறைவனுக்கு "தாயும் ஆனவர்" என்று பெயர். தாயுமானவர் சந்நிதியில், கர்ப்பிணி பெண்கள் சொல்லக்கூடிய ஒரு ஸ்தோத்திரம் இருக்கிறது. பலர் வேண்டிக்கொண்டு, வாழைப்பழக் குலைகள் காணிக்கையாக கொண்டு வந்து தருவார்கள்.

தாயுமானவர் சந்நிதி மேற்கே நோக்கி இருக்கும். உறையூரில் ஆட்சிபுரிந்த சோழ மன்னன் மீது கோபம் கொண்டு, கிழக்கே நோக்கி இருந்த தாயுமானவர், மேற்கே திரும்பி விட்டதாக கதை. உறையூரில் பெரிய மணற்புயல் உருவாகி, ஊரையே அழிக்கும் நிலையில், வெக்காளியம்மன் தலையிட்டு, சிவ பெருமானின் கோபத்தை தணித்தாளாம். இன்றும் வெக்காளியம்மன் தான் ஊரின் காவல் தெய்வம். இந்த மணற்புயலுக்கு இன்னொரு காரணமும் கூறுவார்கள். அம்பிகாபதியை, சோழ மன்னன் தண்டித்ததால், புத்திர சோகம் கொண்ட கம்பன் சோழநாட்டை சபித்ததான். அதனால், பெரிய மணற்புயல் உருவாகி, வளமான உறையூரை வெற்று நிலமாக மாற்றிவிட்டதாக வரலாறு.

உறையூர் 300 கி.மு-விலிருந்தே சோழமன்னர்களின் தலைநகரம். உறையூரில் மன்னர்களின் மாளிகையிலிருந்து, மலைக்கோட்டைக்கு ஒரு சுரங்கம் இருந்ததாகவும் ஒரு கதையிருக்கிறது! பின்னர் பல்லவர்களும், பாண்டியர்களும், நாயக்கர்களும் மலைக்கோட்டைக்கு contribute செய்ததாக வரலாறு கூறுகிறது. கலா ரசிகனான மகேந்திர வர்ம பல்லவன் மலைக்கோட்டையில், அழகான சித்திரங்களும், சிற்பங்களும் அற்பணித்தது சரித்திரம். நாயக்க மன்னன் ஒருவன் தெப்பக்குளத்தையும், கோட்டையையும் கட்டினான்.

இப்படி பல சுவாரஸ்யமான கதைகள் நிறைந்த ஊர் திருச்சி. மலைக்கோட்டையின் உச்சியிலிருந்து திருச்சியை ஒரு கழுகு பார்வை பார்க்கலாம். அமைதியாக பாயும் காவிரியும், திருவரங்கத்தின் ராஜகோபுரமும், ஆனைக்கா அண்ணலின் கோபுர உச்சியும், அரியமங்கலத்தின் பசுமையான வயல்களும், மலைக்கோட்டையை சுற்றி பரபரப்பான வாழ்க்கையின் அவசரத்தையும் அந்திவானில் மறையும் சூரியனின் செங்கதிர்கள் சிவப்பு கலந்த தங்க வெளிச்சத்தில் எடுத்துக்காட்டும். மலைக்கோட்டையின் அந்த பழமையான பாறைகள் கடந்த காலத்து மன்னாதி மன்னர்களையும், வீரர்களையும், கவிகளையும், பக்தர்களையும்,அழகே உருவான வடிவு சுந்தரிகளையும் பார்த்திருக்கின்றன; மாபெரும் ராஜ்யங்களின் உயர்வையும், வீழ்ச்சியையும் கண்டிருக்கின்றன; விபீடணன், வல்லவரையன் வந்தியத்தேவன், குந்தவை நாச்சியார், மகேந்திர வர்ம பல்லவன், ராஜ ராஜன், சாரமாமுனிவர்,என்று பலர் வந்து போன சுவடுகளை தாங்கும் கதை சொல்லும் கற்கள் அவை...வருங்காலத்துக்கும் இதே கதைகளை கூறும்.

புதன், ஆகஸ்ட் 10, 2005

மலைக்கோட்டை - 1 (ஒரு அறிமுகம்)


திருச்சியின் மிக பழமையான பகுதி மெயின்கார்டு கேட். அந்த காலத்தில், ராணி மங்கம்மா எழுப்பிய கோட்டை மதில் சுவரின் facade மட்டும் இன்னும் இருக்கிறது. திருச்சியின் பிரதான shopping area-வான மெயின்கார்டு கேட்டின் மத்தியில் மலைக்கோட்டை. இந்த தெப்பக்குளம் கோவிலின் மட்டும் தான் எப்போதுமே நிரம்ப தண்ணீருடன் நான் பார்த்திருக்கிரேன். திருச்சியின் கடுமையான வெய்யில் அந்தியில் தணியும் நேரம், தெப்பக்குளத்திலிருந்து வரும் மெல்லிய பூங்காற்று சந்தனம், ஊதுபத்தி மற்றும் பூக்களின் மணத்தையும் தன்னோடு அரவணைத்து வந்து சுகம் தரும்.

பெரிய கடை வீதியில் 'சாரத டெக்ஸ்டைல்ஸ்' மற்றும் 'கிருஷ்ணா கார்மெண்ட்ஸ்' என்று அலறும் இரு பெரிய shopping hubs நடுவில், மலைக்கோட்டையின் சிறிய வாயில். உள்ளே சென்றதும் மாணிக்க விநாயகரின் சந்நிதி. ஷாப்பிங் செய்ய வந்தவர்கள், பொழுது போகாமல் நேரத்தை கழிக்க வேண்டி உள்ளே நுழையும் வாலிபர்கள் என்று எப்போதும் கூட்டம் ததும்பும். மிக அழகான மாணிக்க விநாயகர் வெள்ளி கவசம் தரித்து, சிரித்த முகத்துடன் காட்சியளிப்பார். எப்போதும், எருக்கம்பூ மாலையும், அருகம்புல் அலங்காரமும் தரித்திருக்கும் விநாயகரை பார்த்துக் கொண்டே இருக்கலாம்! பிரகாரத்தை சுற்றி, அவ்வையின் விநாயகர் அகவலும், திருப்புகழும் சுவற்றில் பொறித்திருக்கும். இப்போது புதுப்பித்தலில், அதையெல்லாம் மறைக்கும் விதமாக வண்ணம் பூசியிருப்பது சற்று வருத்தம். நம் கோவில்கள் கருங்கற்களால் ஆனாலும், மிக அழகாகவும், கலா ரசனையுடனும் படைக்கப் பட்டவை. அதை நவீன வண்ணங்களாலும், நமது 21-ஆம் நூற்றாண்டு சாயலில் புதுப்பிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

பிள்ளையாரை தாண்டி மலைக்கோட்டை செல்லும் படிகள் ஏறவேண்டும். செங்குத்தான படிகள். ஆனால், படி கற்களை மிக நேர்த்தியாக இழைத்திருப்பார்கள் அந்த கால சிற்பிகள்! சற்று தூரம் ஏறினாலே, சிறு ஜன்னல்கள் வழியாக பொன்னியில் புறப்படும் மாலை தென்றல் அள்ளிச் செல்லும். பல நாட்கள், நானும் என்னுடைய நண்பர்களும், அந்த ஜன்னல்களுக்கு அருகே அமர்ந்து பேசியதுண்டு. இயற்கையின் அழகிய air conditioning அது! மேலே செல்லும் வழியில், ஒரு இடத்தில் இரு பக்கத்திலும் இரண்டு பெரிய சிற்ப மண்டபங்கள் வரும். முற்றிலும் கல்லிலேயே குடையப்பட்ட மண்டபங்கள். Monolithic pillars என்று கூறப்படும் ஒரே கல்லாலேயே உருவாக்கப்பட்டவை. இந்த மண்டபங்களில், மகேந்திர வர்ம பல்லவர் சுவற்றில் சித்திரம் வரைந்ததாக கூறுகிறார்கள். நான் பார்த்ததில்லை. ஆனால், சுவற்றின் சித்திரங்கள் கண்ணுக்கு தெரியாத வகையில் அழிந்து போயிருக்கின்றன. 'பார்த்திபன் கனவி' லும் இதை பற்றி ஒரு reference வரும்.

பொதுவாக விஷ்ணுவைத்தான் அழகு என்று போற்றுவார்கள். அவர்கள் அநேகமாக தாயுமானவரை பார்த்திருக்க மாட்டார்கள்!

"பொன்னார் மேனியனே புலித்தோலை அரக்கசைத்து
மின்னார் செஞ்சடை மேல் மிளிர்கொன்றை அண்¢ந்து
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே!"

என்று என்னை மறந்து பாட வைத்த சுந்தரேசன் அந்த தாயுமானசுவாமி! 5 அடிக்கும் மேல் உயரமான லிங்கம். ஆடம்பரமே இல்லாத அலங்காரம் சிவனுக்கு. ஈர வேட்டியும், வில்வ இலையும்தான் usual அலங்காரம். பிரகாரங்களில் குளிர் காற்று வீச, சஞ்சலமான மனதுக்குக் கூட அமைதியூட்டும் சூழ்நிலை. பல நாட்கள் நான் அமைதியாக ஒரு பத்து நிமிடம் வாழ்க்கையின் அவசரத்தை விட்டு அமர்ந்துவிட்டு வருவேன்.

மலைக்கோட்டை தொடரும்....

செவ்வாய், ஆகஸ்ட் 02, 2005

திருவண்ணாமலை

திருவண்ணாமலை என்றாலே அருணாசலேசுவரரும், உண்ணாமுலையம்மனும் தான் நினைவில் வருவார்கள். புகழ் பெற்ற சைவத் திருத்தலமான திருவண்ணாமலை என்ற பேரில் ஒரு வைணவத் திருத்தலமும் உண்டு.

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே 10 கி.மீ தொலைவில் உள்ளது திருவண்ணாமலை. மிக சிறிய கிராமம். பல பேருக்கு தெரியாது. ஸ்ரீவில்லிப்புத்தூரிலேயே கேட்டாலும், சிலர் தான் சரியாகக் கூறுவார்கள். என் தந்தை, மதுரையில் அலுவல் புரிந்த போது, ஒரு நண்பர் யதார்த்தமாக அழைத்து கொண்டு சென்ற கோவில். என் தந்தைக்கு மிகவும் பிடிக்க, நாங்கள் எல்லோரும் சென்றோம்.

ஒரு சிறிய குன்றின் மேல் இருக்கிறது கோவில். மிக சிறிய ஆலயம். நம் பெருமாள் வீர ஸ்ரீனிவாசன் வீரவாளுடன் தரிசனம் தருவார். திருப்பதி பெருமாளின் அச்சு அசல். மகாவிஷ்ணு அழகின் ஸ்வரூபம். ஆனால் திருப்பதியில் நாம் அருகில் சென்று ரசிக்க முடியாத அழகு, இங்கு மனதார அருகே சென்று ரசிக்கலாம்! ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் கல்யாணத்துக்காக திருப்பதி பெருமாள் புறப்பட்டதாகவும், கால தாமதமாக வந்ததனால், ஸ்ரீரங்கம் செல்லாமல் இங்கேயே settle ஆகிவிட்டதாக ஐதீகம். ஆகையால், இந்த பெருமாளை பார்த்தால், திருப்பதி சென்ற பலன்.

ஒரு மார்கழி மாத காலையில், மதுரை ஜில்லாவின் இனிமையான விடிகாலை நேரத்தில், பனி விழ நாங்கள் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்வித்தோம். கர்ப்பக்கிருகத்துக்கு அருகே அமர்ந்து நாலாயிர திவ்ய பிரபந்தமும், சுப்ரபாதமும் ஒலிக்க புன்னகை தவழும் ஸ்ரீநிவாசனை நன்றாக தரிசித்தோம். பின் நல்ல மிளகு சாத பிரசாதம் கிடைத்தது! அந்த மாதிரியான ஒரு மிளகு சாதம் நான் வேறெங்கும் உண்டதில்லை (ஸ்ரீரங்கம் உட்பட)! பின்னர் பல முறை அந்த கோவிலுக்கு சென்றாகிவிட்டது. ஸ்ரீவில்லிப்புத்தூர் செல்லும் போதெல்லாம் அங்கும் சென்றுவிட்டு வருவோம்.

மனித மனது வேலை செய்யும் வகையே விசித்திரம். ஒரு சில கோவில்கள் செல்லும் நேரம், மனதில் அமைதியும், வாழ்க்கையில் இன்பமூட்டும் விஷயங்களும் நடக்க நேரலாம். இறை நம்பிக்கையுள்ளவர்கள், அதை தெய்வச் செயல் என்பார்கள். நாத்திகர்கள்,அது சந்தர்ப்ப சூழ்நிலை என்று கூறலாம். எது எப்படியோ, அந்த சந்தோஷம் நேரும்போது நாம் எந்த இடத்தில் இருக்கிறோமோ அந்த இடத்தோடு associate செய்து விடுவோம்! அப்படிதான் எனக்கு இந்த கோவில். மதுரை ஜில்லாவின் பசுமையான கிராமங்களும், மிக அமைதியான வாழ்க்கையும் நினைவூட்டும் இந்த அழகிய திருத்தலம், என்றும் என் மனதில் இருக்கிறது.