வெள்ளி, ஜூன் 02, 2006

இது வசந்த காலம். குளிர்காலம் நீங்கிய களிப்பில், முகம் தெளிந்து இருக்கிறாள் வான மங்கை. அதிகாலையில், அருணோதயத்தில், சூரியதேவனைக் கண்டு நாணி அவள் முகம் சிவந்திருந்தது. சூரியன் வானில் சிம்மாசனத்தில் ஏற ஏற, வானதி தன் வெட்கம் மறந்து அவனது அணைப்பில் நீல நிறமாக பொலிகிறாள்! மறையும் மதியும், ஜொலிக்கும் நட்சத்திரங்களையும் அணிகலனாக பூண்டு சிரித்து மகிழ்கிறாள்.

அவளது அழகைக் கண்டு பூமியில் உயிரினங்கள் முகம் மலரும். கவிகள் பாடல் புனைவார்கள். ஆனால் அழையா விருந்தாளியாக வருணன் அவ்வப்போது வானவீதியில் குடியேறிவிடுகிறான்! சூரியதேவனை மறைத்துவிடுகிறான்! அழையாமல் அவன் வந்ததால் வானதியின் களியாட்ட திருக்கோலத்துக்கு ஒரு அவசர தடங்கல். வான மங்கை முகம் சுளித்து, புருவம் நெறித்து, கோபப்படுவதால் திருமுகம் கருத்ததோ? காதலனிடமிருந்து பிரிந்ததனால், ஆபரணங்களை விடுத்து, கார்முகில்களையே பூணுகிறாள் வானதி!

வருணனும் சளைத்தவன் இல்லை. காற்றை துணைக்கு அழைக்கிறான். தன் அழகிய கோலம் கலைந்ததால், சற்று நேரத்தில் வானதியின் இந்த கோபம் கண்ணீராய் மாறக்கூடும். பின்பு, அவளின் உக்ர தாண்டவமே! அவள் கண் வெட்டுகள் மின்னலாய் வானைப் பிளக்கும். அவள் கோப சிணுங்கல் இடியாக முழங்கும். உலகம் நடுங்கும்.

வானதி, இந்த போர்க்கோலமும் உனக்கு அழகாகவே இருக்கிறது! உனது கோபமும், கண்ணீருமே பூமிக்கு உயிர் தரும்! பஞ்சபூதங்களில் மூன்று மோதிக்கொண்டால், நான்காவதான நிலமகள் களிப்படைவாள். இலையும், கிளையும், புல்லும், பசுவும் வானம் பார்த்து நன்றி கூறும்! பசுமை செழிக்கும்! வானதி, வருணனும் காற்றும் உன் வெறியாட்டம் கண்டு ஓடுவார்கள். மறுபடியும் சூரியதேவனை கண்டு நீ முகம் மலர்வாய்!

வானும், மண்ணும், காற்றும், கடலும் பேதம் பார்ப்பதில்லை என்று கூறுவார்கள். அமெரிக்காவில் தான் நான் நிறைய மழையை பார்த்திருக்கிறேன். இருந்தாலும், 'மழை' என்றவுடன் என் மனது இந்தியாவின் மழைக்காலகாட்சிகளையும், வாசனைகளையுமே அசைபோடுகின்றன...

மாலை வேளையின் வெயில் களைப்பு தீர்க்க விழும் ஜில்லென்ற கோடை மழை...
சட்டென்று குளிர்ந்துவிடும் பூமி...
'கம்' மென்று கிளம்பும் மண் வாசனை....
மழையில் புத்துயிர் பெற்று, வாசம் வீசும் மலர்கள்....
புழுதி நீங்கி பளீர் பச்சையாக காட்சியளிக்கும் இலைகள்...
வருடிச்செல்லும் மெல்லிய, குளிந்த காற்று...
அங்காங்கே, தெருவில் தேங்கி கிடக்கும் குட்டைகள்...
அதில் விளையாடும் சிறுவர்கள்...
லேசான குளிருக்கு இதமாக, டீக்கடைகளில் கூட்டம் கூட்டமாக சூடாக மசாலா டீ அருந்தும் கும்பல்...
மிளகாய் பஜ்ஜி விற்கும் கடைகளில் சிரித்துக் கொண்டிருக்கும் இளசுகள் கூட்டம்....

இந்த மண்வாசனைக்கு கூட பேதம்! இந்திய மண்ணின் வாசனையே தனி...அது கலப்படம் இல்லாத மண்ணின் வாசம். இங்கோ பெர்டிலைசரும், மருந்தும் கலந்து மண் வாசம் எழுகிறது. மனது லயிக்கவில்லை!