புதன், நவம்பர் 09, 2005

வாழ்க்கையின் அவசரத்தில் கால்களில் சக்கரம் கட்டி கொண்டு ஓடுகையில், அன்றாடம் என்னை சுற்றியிருக்கும் பல அழகிய காட்சிகளை, சம்பவங்களை ரசிக்க மறந்துவிடுகிறேன். படைப்பின் அற்புதங்களான பல விஷயங்களை நாம் வாஸ்தவமாக எடுத்து கொண்டு போய்விடுகிறோம். ஒரு குழந்தைக்கு உலகில் எல்லாமே புதியது. தன்னை சுற்றியிருக்கும் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்கின்ற உற்சாகமும், ஆர்வமும் இருக்கும். இதே வயது ஆக, ஆக பல அனுபவங்கள்/விஷயங்கள் தெரிந்து விடுகின்றன.அல்லது தெரிந்து விட்டது என்று நினைத்து கொண்டு விடுகிறோம். ஆங்கிலத்தில் "Been there. Done that." என்று கூறுவார்கள். காணும் எல்லா காட்சியும், பார்க்கும் மனிதர் அனைவரையும் பாகுபடுத்தி பார்த்தால் தான் நிம்மதியாக இருக்கிறது. "இது அன்று நடந்ததை போலல்லவா இருக்கிறது? இவர் நம் பக்கத்து வீட்டு நண்பரை போலவே நடந்து கொள்கிறாரே!" என்று எப்போதும் ஒரு பக்கம் pattern match செய்து கொண்டே எண்ண அலைகள் எழும்பி, எழும்பி தாழ்கின்றன. இந்த pattern-matching தான் நமக்கு வாழ்வில் பிரச்சினைகளை தீர்க்கவும், முடிவுகளை எடுக்கவும் உதவுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அனுபவம் கூடும் போது, இன்னும் நிறைய முன்மாதிரிகள் தெரிய வருகின்றன. அதற்கேற்றார்போல், நாம் இன்னும் பல பாகுபாடுகளை உருவாக்கி, அதற்குள் எல்லாவற்றையும் அடக்க முனைகிறோம். ஆக, எதையுமே புதுமை என்று நினைக்க விரும்பாத மனதுக்கு எப்படி புத்துணர்வு இருக்கும்? எல்லாவற்றையுமே பழைய கண்ணோட்டம், தவறுகள், திருத்தங்களால் செய்த கண்ணாடியால் பார்த்தல் எவ்விதத்தில் நல்லது? என் நண்பன் ஒருவன் கூறுவான், "Subha, you should let yourself be surprised everyday!". மிக உண்மை என்று இன்று தோன்றுகிறது. நான் இவ்வளவு கடுமையான விஷயத்தை கூற நினைத்து எழுத ஆரம்பிக்கவில்லை...:)

என்னையும், என் அவசரத்தையும் மீறி என்னை தினமும் அசத்தும் ஒரு விஷயம்: மலர்கள். அழகான, வெள்ளை மொட்டுக்களில் சிறிய நீர் முத்துக்கள் விளையாட, நறுமணம் வீசும் மல்லிகை, முல்லை, ஜாதி, ரோஜா பூக்களுக்கு என் மேல் ஒரு தனி ஆளுமையுண்டு! எவ்வளவு முறை பார்த்தாலும், சூடினாலும் எனக்கு இன்று வரை அலுத்தது கிடையாது! அதிகாலையிலும், அந்தி சாயும் நேரத்திலும் பூக்காரர்கள் மிக வேகமாக ஆனால் லாவகமாக, தாளம் தவறாமல் (ஆம் அவர்களின் அந்த பூக்கட்டும் கலையிலும் சங்கீதாம்சம் இருக்கத்தான் செய்கிறது..:))மலர்களை, அடர்த்தியான சரங்களாக கோர்க்கும் கலையே மிக அழகு. ஸ்ரீரங்கத்தின் சாத்தார வீதிதான் பூச்சந்தை. கற்பூரமும், ஊதுவத்தியும், பன்னீர் வாசனையுடனும் கலந்து வரும் பூவாசம் நாசியை துளைக்கும்! அம்மா அருகே இருக்கும் கடைகளில் காய்கறி வாங்குகையில், பூச்சந்தையில் இங்கும் அங்கும் நான்கு முறை நடந்து, வேடிக்கை பார்த்துவிட்டு வருவேன்.

அரங்கனுக்கு கோடை வெயில் தெரியாமல் இருக்க, ரங்கநாயகி சமேதராய் வசந்த மண்டபத்தில் தண்ணீருக்கு நடுவே சந்தியா வேளையில் சேவையாற்றுவார்கள். அருகேயிருக்கும் நந்தவனத்திலிருந்து துளசி மணமும், பூமணமும் கலந்து வீசும் மிக ரம்மியமான சூழல்! சில நாட்கள், கோடை மழை சற்று பூமியை நனைக்கும் நேரம், மண்வாசனையும் கலந்து மிக ஆனந்தமாக இருக்கும்! எத்தனை முறைதான் இதை ரசித்தாலும், ஒரு சிறு பிள்ளையின் கண்ணோட்டத்தோடு, புத்துணர்வுடன் நான் விரும்பும் விஷயங்களில் இதுவும் ஒன்று!